அரங்கம் நிறைந்த பேராளர்களோடு 'கனகர் கிராமம்' அறிமுக விழா
கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனின் "கனகர் கிராமம்" (அரசியல்-சமூகம்- வரலாற்று நாவல்) அறிமுக நிகழ்வு 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இந்து கலாசார நிலையம் நாவற்குடா - மட்டக்களப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் கதிரவன் உறவுகள் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக் கழக மொழித் துறை பேராசிரியர் சி.சந்திரசேகரம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், இலக்கிய கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க் கோபால் ஆகியோர் பங்குபற்றினர்.
சிறப்பு விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரெத்தினம் (நவாஜி), மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபை தலைவர் மற்றும் ஓய்வு நிலை வலயக்கல்விப் பணிப்பாளர் திரு க.பாஸ்கரன், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, சைவப்புலவர் திருமதி சிவானந்தசோதி ஞானசூரியம், எழுத்தாளர் கலாபூஷணம் ஏ.பீர்முகமது, மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார இணைப்பாளர் திரு கி.குணநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
கதிரவன் கலைக் கழக ஆலோசகர் திரு மா.சதாசிவம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந் நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்தினை செல்வி சுலக்ஷினி புவனேந்திரராஜா அவர்கள் வழங்க, வரவேற்புரையினை கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஆலோசகர் சட்டத்தரணி அ அன்பழகன் குரூஸ் அவர்கள் வழங்கினார்.
கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனப் பேராசிரியர் சு. சிவரெத்தினம் நூல் அறிமுக உரையினை நிகழ்த்த, இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் திரு த.குணராஜா முதற்பிரதியினை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் அதிதிகள், ஆர்வலர்களுக்கான சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
நூல் நயவுரையினை மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் திரு அ. ஜெயநாதன் வழங்க, நிறைவுரையினை நூலாசிரியர் செங்கதிரோன் வழங்கி நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
அறிமுக நிகழ்விற்கு மட்டக்களப்பின் கலை இலக்கிய ஆர்வலர்கள், அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் பங்குபற்றி யிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கதிரவன் த.இன்பராசா
தலைவர், கதிரவன் கலைக் கழகம்






















































































