செங்கதிரோனின் 'கனகர் கிராமம்' அறிமுக நிகழ்வு


கதிரவன் கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் செங்கதிரோன் த. கோபாலகிருஷ்ணனின் "கனகர் கிராமம்" (அரசியல்-சமூகம்- வரலாற்று நாவல்) அறிமுக நிகழ்வு எதிர்வரும் 26.04.2026 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு இந்து கலாசார நிலையம் நாவற்குடா - மட்டக்களப்பில் இடம் பெறவுள்ளது. 

கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் கதிரவன் உறவுகள் ஒழுங்கமைத்து நடத்துகின்ற  இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினர்களாக  கிழக்குப் பல்கலைக் கழக மொழித் துறை   பேராசிரியர் சி.சந்திரசேகரம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், இலக்கிய கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க் கோபால் ஆகியோர் பங்குபற்ற வுள்ளனர்.

கௌரவ விருந்தினர்களாக கிழக்குப் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரெத்தினம்  (நவாஜி), மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த நூற்றாண்டு விழாச்சபை தலைவர் மற்றும் ஓய்வு நிலை வலயக்கல்விப் பணிப்பாளர்  திரு க.பாஸ்கரன், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி, சைவப்புலவர் திருமதி சிவானந்தசோதி ஞானசூரியம், எழுத்தாளர் கலாபூஷணம் ஏ.பீர்முகமது, மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார இணைப்பாளர் திரு கி.குணநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

கதிரவன் கலைக் கழக ஆலோசகர் திரு மா.சதாசிவம் அவர்களின் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகும் நிகழ்வின் தமிழ் மொழி வாழ்த்தினை செல்வி சுலக்ஷினி புவனேந்திரராஜா அவர்கள் வழங்க, வரவேற்புரையினை கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஆலோசகர் சட்டத்தரணி அ அன்பழகன் குரூஸ் அவர்கள் வழங்கவுள்ளார்.  

கிழக்குப் பல்கலைக் கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவனப் பேராசிரியர் சு. சிவரெத்தினம் நூல் அறிமுக உரையினை நிகழ்த்த, இறைவரித் திணைக்களப் பிரதி ஆணையாளர் திரு த.குனராஜா முதற்பிரதியினையும் பெறவுள்ள இந்நிகழ்வில் அதிதிகள், ஆர்வலர்களுக்கான சிறப்பு பிரதிகள் வழங்கும் நிகழ்வும் இடம் பெறவுள்ளது.

நூல் நயவுரையினை மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் திரு அ. ஜெகநாதன் வழங்க, நிறைவுரையினை நூலாசிரியர் செங்கதிரோன் வழங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வினை சோலையூரான் ஆ.தனுஷ்கரன் தொகுத்து வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமன்றி இலங்கையின் பல பாகங்களிலும் இருந்தும் படைப்பாளிகள் கலை,இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பற்றும் இந்நிகழ்வில்  வெளியிடப்படும் "கனகர் கிராமம்" எனும் நாவல் அரசியல்-சமூகம்-வரலாறு சார்ந்து பல்வேறு விடயங்களைப் பேசுகின்றது.



சமூகத்தினுடைய வரலாற்றுச் சுவடுகளை படைப்பாளிகள் கவிதைகளாகவும், சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும், இன்னும் இலக்கிய-கலை வடிவங்களாகவும்,வழங்கிக் கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் சிறப்பான மொழி நடையில், உள்ளதை உள்ளவாறு, கற்பனைகளைக் கடந்து, நிகழ்வுகள் கண்முன்னே தோன்றும் அளவிற்கு, சம்பவங்களை பாத்திரங்களின் ஊடாக நாவல் இலக்கியத்தின் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றமை தற்கால சமூகத்திற்கும், எதிர்கால சந்ததிக்கும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

இந் நாவல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அரசியல்,சமூக,பொருளாதார வாழ்வியலைக் குறிப்பாகவும் கிழக்குமாகாண மக்களின் வாழ்வியலைப் பொதுவாகவும் பதிவு செய்கின்ற நாவல்.        அம்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள் மற்றும் தொன்மங்கள் நம்பிக்கைகள் பற்றியும் பேசுகிறது.           இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி எனும் வகையில் உண்மைச் சம்பவங்களின் கோர்வையே நாவலாகியிருக்கிறது.

'கச்சான் சேனைப்பயிர்ச் செய்கை-கதிர்காம நடை யாத்திரை-பாணமைப் பத்தினியம்மன் வழிபாடு-'யால' சரணாலயம்-சங்கமன்கண்டி,உகந்தை,கதிர்காமம் கோயில்களின் வரலாறு-திருக்கோவில் 'விஷக்கல்'-1977 இனக்கலவரம்-1978 சூறாவளி-தமிழ்தேசிய அரசியலின் பலம் பலவீனங்கள்-தமிழ் முஸ்லிம் உறவு-கல்முனைக் கடற்கரைப்பள்ளி-பொத்துவில் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் அரசியல் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகள்,அவர்தம் வாழ்க்கை வரலாறு-தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்ட ஆரம்பம்-'கனகர் கிராமம்' மீள்குடியேற்றம் பிரச்சினை-தமிழர்தரப்பு அரசியலின் செல்நெறி பற்றியெல்லாம் புனைவுகளில்லாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அளவான அழகியலுடன்-செழிப்பான மொழிநடையில் -வாசக வசீகரிப்புடன் அம்மணமாகப் பேசுகிறது.'சித்தர்கள்' மற்றும்'அவுலியாக்கள்' பற்றியும் பதிவு செய்கிறது.மொத்தத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பேணிப் பாதுகாக்கவேண்டியதொரு சமூக ஆவணமாகும். 

இத்தகைய நாவல் அறிமுக விழாவிற்கு அனைவரையும் அழைப்பதில் கதிரவன் கலைக் கழகம் பெருமை கொள்கிறது.

கதிரவன் த.இன்பராசா

தலைவர்

கதிரவன் கலைக் கழகம்