ஔவை விழா 21.06.2026




பிரமாண்டமாக நடைபெறவுள்ள ஔவை விழா - 21.06.2026


காலத்திற்கு காலம் ஔவையார் எனும் பெயரில் பெண் புலவர்கள் தோன்றி நற்றமிழ் பணியாற்றி நல்ல நூல்களை சமுதாயத்தை ஆற்றுப்படுத்தும் நோக்கில் படைத்துள்ளார்கள். 

அவ்வாறு படைக்கப்பெற்ற அற நூல்கள் வழியாக நற் சிந்தனைகள் விதைக்கப்பட்டு மக்கள் சீர் பெற்று வாழக்கூடிய வழி உருவாக வேண்டும். 

ஆரம்பக் கல்வி தொடக்கம் நாம் ஆன்றோர் ஆகும் வரைக்கும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை விடயங்களையும் அருமையாகப் பாடிய ஔவையாரைப் போற்றி புகழ வேண்டும். அதன் மூலம் சமூகத்திற்கு நல்லதொரு செய்தியைச் சொல்ல வேண்டும்.

மனித வாழ்வியலோடு தொடர்புடைய எந்த விடயத்தினை எடுத்துக் கொண்டாலும் ஔவையின் வாக்கு ஒன்று அதற்கு எடுத்துக்காட்டாகவும், இவ்வாறுதான் வாழ வேண்டும் என்று செய்தி சொல்வதாகவும் அமைந்து விடுவதை நாம் அவதானிக்கின் றோம்.

இந்தப் பின்புலத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் வேல்முருகன் சகோதரர்கள் ஔவை சிலை ஒன்றினை நிறுவி உள்ளார்கள். வேல்முருகன் சகோதரர்கள் எனும் குடையின் கீழ் வேல்முருகன் ஸ்டோர்ஸ், சண்முகா ஏஜன்சி, வேல்முருகன் விநியோகஸ்தர்கள், சண் பன்சி ஹவுஸ், தேனகம் முதலான வர்த்தக நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவர்களே இந்த ஔவை சிலையின் தோற்றத்திற்கும், ஔவை விழாவின் ஏற்றத்திற்கும் புரவலர்களாக விளங்குகின்றார்கள்.   

கல்லடிப் பாலத்தை கடக்கின்ற போதும், ஔவை சிலையைப் பார்க்கின்ற போதும் ஔவையார் பற்றிய எண்ண அலைகளும், அவர் சார்ந்த நற் கருத்துக்களும் மனதில் ஒட்டிக் கொள்ளும். அது ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் புதிய சிந்தனையை உருவாக்கும். இவ்வாறுதான் ஒவ்வொரு ஆன்றோர்களின் சிலைகளும், அடையாளங்களும், அவர்கள் சமூகத்திற்காக விட்டுச் சென்றவைகளும்  வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் என்பது போல் ஏதோ ஒரு வகையில் அவர்களை ஆற்றுப்படுத்தும்.

இவ்வாறே கல்லடி பாலத்தில் காணப்படுகின்ற முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் கருங்கற் சிலையும், சுவாமி விவேகானந்தரின் சிலையும் மனித நேயத்துடன், மக்கள் சேவை புரிகின்ற சிந்தனையை தோற்றுவிக்கும்.  

ஆற்றுப்படுத்தல் இல்லாத சமூகம் தோற்றுப்போகும். அத்தகைய நற்காரியம் தான் வேல்முருகன் சகோதரர்களின் ஔவை சிலை உருவாக்கம்.

சிலை அமைப்போடு மட்டும் நின்று விடாமல் காலத்திற்கு காலம் ஔவைக்கு விழா எடுக்க வேண்டும் என்கின்ற எண்ணமும் அவர்களுக்கு உருவாகியது.

அதன் முதற்கட்டமாக 2020 ஆம் ஆண்டு முதலாவது ஔவை விழா வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஔவை அவையினால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரமாண்டமாக நடைபெற்றது.

தற்போது இரண்டாவது ஔவை விழா -21.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3.00 மணி தொடக்கம் மட்டக்களப்பு கல்லடிப் பாலம் ஔவை சிலை முற்றத்தில் சிறப்பாக நடைபெற ஆயத்தங்கள் நடைபெற்று வருகின்றது. 

ஔவை விழாவின் சிறப்பிற்காக இவ்வருடம் (2026) தை மாதம் தொடக்கம் பல்வேறு போட்டி நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவேறி ஔவை விழா தினத்தன்று அரங்கேற்றம் காணவும் இருக்கின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விவாத போட்டி, மட்டக்களப்பு மாவட்ட அரச அலுவலகங்களின் அரச அலுவலர்களுக்கான மாவட்டமட்ட விவாத போட்டி, மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மாவட்ட மட்ட வில்லுப்பாட்டுப் போட்டி, தேசிய மட்ட கவிதைப்போட்டி என்பன நடைபெற்றிருக்கின்றது.

21.06.2026 ஔவை விழா பிற்பகல் 3.00 மணிக்கு பண்பாட்டுப் பவனியோடு ஆரம்பமாகி, ஔவை சிலைக்கு மலர் மாலை அணிவித்து, ஆன்மீகத் தலைவர் களின் ஆசியுரையுடன் யோகாசனத்தினை மையப்படுத்திய வரவேற்பு நடனம் இடம்பெற்று நிகழ்வுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் பாடசாலைகளுக்கிடையிலான மற்றும் அரச அலுவலர்களின் அரச அலுவலகங்களுக் கிடையிலான மாவட்ட மட்ட விவாதப் போட்டிகளுக்கான இறுதிச்சுற்று, மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற வில்லுப்பாட்டினுடைய ஆற்றுகை, தேசிய மட்ட கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்ற கவிதை வாசிப்பு மற்றும் விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு ஔவை விழா சிறப்படையவுள்ளது. 

இவ்விழாவினைக் கண்டுகளிக்க கலை-இலக்கிய-சமூக ஆர்வலர்கள் அனைவரையும் ஆயத்தமாகும்படி அன்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

இந்நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விருந்தினர்கள் வருகைதர உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


கதிரவன் த.இன்பராசா

தலைவர்

கதிரவன் பட்டிமன்றப் பேரவை