காலத்திற்கு தேவையான 46000 தமிழ்ப்பெயர் தொகுப்பு

 "தமிழ்ப்பெயர்த் தொகுப்பு" காலத்திற்கு தேவையான வரவு.




மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்குபடுத்தலில்  திருகோணமலை மற்றும் கல்முனை தமிழ்ச்சங்கங்களின் இணைவோடு தமிழமுதம் வெளியீடு செய்யும் தமிழ்ப்பெயர்த் தொகுப்பு (46000) இரண்டாம் பதிப்பு நூல் வெளியீட்டு விழா 

மட்டக்களப்புத்  தமிழ்ச்சங்க மண்டபத்தில் 10.05.2026 ஞாயிற்றுக்கிழமை , காலை 10.00 மணிக்கு மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக இடம் பெறவுள்ளது.

முதன்மை விருந்தினராக  மட்டக்களப்பு மாநகர கௌரவ முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்கள் பங்குபற்றும் இந்நிகழ்விற்கு முன்னிலை விருந்தினராக கிழக்குப் பல்கலைக் கழக கலை கலாசாரப் பீட  தமிழ் கற்கைகள் துறை தலைவர் திருமதி விஜிதா திவாகரன் அவர்கள் பங்குபற்ற வுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை பொருளாளரும், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு த.யுவராஜன் அவர்களும் சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஓய்வு நிலை உதவி கல்விப் பணிப்பாளருமாகிய வித்தகர், விபுலமாமணி வி.ரி சகாதேவராஜா அவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

விருந்தினர்கள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல் இறைவணக்கத்தோடு ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்தினை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்றைகள் நிறுவன மாணவி சுலக்சினி புவனேந்திரராஜா அவர்கள் வழங்க, வரவேற்புரையினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு. கணேசராசா அவர்கள் வழங்கவுள்ளார்.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. ரஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையுரையினை தொடர்ந்து, திருகோணமலை தமிழ்ச் சங்கத் தலைவர்  திருமலை நவம் மற்றும் அம்பாறை தமிழ்ச் சங்கத் தலைவர் சஞ்சீவி சிவகுமார் ஆகியோரின் சிறப்புரைகள் இடம் பெறவுள்ளது. தமிழ் அமுதம் தமிழ் பணிக் குழுத் தலைவர் சொ.வெற்றியரசன் அவர்களின் வெளியீட்டுரையோடு நூல் வெளியீடு இடம்பெற்று நூல் நயவுரையினை தேசிய கல்வி நிறுவக தமிழ்மொழித் துறைப் பணிப்பாளர் கலாநிதி முருகு தயாநிதி அவர்கள் நிகழ்த்த, வாழ்த்துக் கவியினை கதிரவன் கலைக் கழகத் தலைவர் கதிரவன் த. இன்பராசா அவர்கள் வழங்கவுள்ளார். தொடர்ந்து ஏற்புரையினை தமிழமுதம் தமிழ் பணிக்குழு இணைச் செயலாளர் திரு க.கனகசிங்கம் நிகழ்த்த, நன்றியுரைனை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் திரு ச.கணேசமூர்த்தி அவர்கள் வழங்க உள்ளார். 

பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ள இந்நூல் எல்லோர் கவனங்களையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அர்த்தம் இல்லாத பெயர்களையும், உச்சரிக்க முடியாத பெயர்களையும், சோதிடர் எழுத்துச் சொல்லிவிட்டார் என்பதற்கான பெயர்களையும், நவீன காலத்தில் இப்படித்தான் வைக்க வேண்டும் எனும் தவறான சிந்தனையுடைய பெயர்களையும் பிள்ளைகளுக்கு சூட்டுகின்ற காலத்தில் இத்தகைய நூல் வரவு சிறப்பான தமிழ் பெயர்களை வைக்க உதவும் ஒரு அடையாளமாக விளங்கும்.

ஒருவருடைய பெயரினைக் கேட்டதும் அவரின் இனம், மொழி, சமயம் என்பன வெளிப்படும்.கட்டாயம் அவை வெளிப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு வெளிப்படுகின்ற போதுதான் அந்த இனமும், அந்த மொழியும், அந்தச் சமயமும் வாழுகின்றது என்று அர்த்தம். பெயர்கள் மாற்றமடைய மாற்றமடைய ஒரு இனமும், அதன் மொழியும், சமயமும் மாற்றமடையத் தொடங்கும். தமிழர்கள் தமிழ் பெயரை வைப்பது எதிர்காலத்தில் தமிழனின் அடையாளத்தை இன்னும் மேல் நோக்கிக் காட்டும். அத்துடன் தமிழ் பெயர் கொண்ட ஒருவர் புரிகின்ற சாதனையும் தமிழ் இனத்தின் அடையாளமாகப் பேசப்படும். 

ஆக இத்தகைய நூல் வரவுகள் சிந்தித்து பெயர் வைக்கின்றவர்களுக்கும், சிந்திக்காமல் பெயர் வைக்கின்றவர்களுக்கும் தேவையான பொக்கிஷமாக அமையும். இவ்வெளியீட்டு விழாவில் பங்குபற்ற....

🙏 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் 🙏


கதிரவன் த.இன்பராசா

தலைவர்

கதிரவன் கலைக் கழகம்