இந்திய-இலங்கை அரங்காக இணைந்து நடத்திய கம்பன் விழா

கதிரவன் கலைக்கழகம்; போபால் கம்பன் கழகம் இணைந்து இலங்கை-மட்டக்களப்பில்
கம்பன் விழா - 2026



இந்தியா போபால் கம்பன் கழகத்தின் இரண்டாவது ஆண்டு கம்பன் விழாவாகவும், இலங்கை மட்டக்களப்பு கதிரவன் கலைக் கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நிகழ்வின் ஓர் அங்கமான கம்பன் விழாவாகவும் வடிவமைக்கப்பட்டு இரண்டு அமைப்புகளும் இணைந்து மட்டக்களப்பில் பிரமாண்டமாக நடைபெற்ற "கம்பன் விழா - 2026" 














இந்நிகழ்வு 29.03.2026 ஞாயிற்றுக் கிழமை கிரான்குளம் சீ மூண் கார்டன் மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக "அயோத்தி அரங்கு" மற்றும் "இலங்கேஸ்வரன் அரங்கு" என பெயரிடப்பட்டு சிறப்பாக நடைபெற்றறது.

பட்டிமன்ற நடுவர் கதிரவன் தலைவர் - கதிரவன் த.இன்பராசா ஒழுங்கமைப்பில், போபால் கம்பன் கழகச் செயலாளர் திரு பா.குமார் அவர்களின் இணைப்பாக்கத்தில்  நடைபெற்ற இவ்விழா காலை அமர்வு விருந்தினர்கள் வரவேற்போடு ஆரம்பமாகியது.

கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் நல்லாசியுடன்,  கதிரவன் கலைக் கழகத் தாபகர் கலாபூசணம் சி.தங்கராசா அவர்களின் முன்னிலையில்,  புதுக்குடியிருப்பு சிறி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு ஜனார்த்தனன் குருக்கள் அவர்களிள் ஆசியுரையுடன்,  போபால் கம்பன் கழகத் தலைவர் முனைவர் கா.பா சௌந்தர்ராஜன் அவர்களின் தலைமையுரையோடு, போபால் கம்பன் கழகச் செயலாளர் திரு பா. குமார் அவர்களின் தொடக்க உரையோடு கம்பன் விழா அரங்கை அலங்கரித்தது.












பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி இரா முரளீஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், மண்முனைப் பற்று பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திரு கி.இளங்குமுதன் மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் திரு சூ. பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும்

புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு வே. தட்சணாமூர்த்தி, அகில இலங்கை சைவப் புலவர் சங்க உப தலைவர் சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம்,  உதவும் கரங்கள் தலைவர் திரு ச. ஜெயராஜா, வவுனியா பல்கலைக்கழக உறுப்பினர்  கலாநிதி நாகமுத்து தணிகாசலம்பிள்ளை,  உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பின் ஆலோசகர் சிவசிறி சிவ தர்சக சர்மா குருக்கள், ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்ததோடு கொழும்புத் தமிழ் சங்கத் தலைவர், கொழும்பு தமிழ் சங்கச் செயலாளர் ஆகியோர் விசேட விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்வைச் சிறப்பித்தனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை விருந்தினர்களாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மங்கல விளக்கேற்றலுடன் அன்னை சாரதா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் இறைவணக்கத்தோடு கதிரவன் கீதம் இசைக்கப்பட்டு ஆசியுரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.




















தொடர்ந்து கதிரவன் கலைக்கழக செயற்குழு உறுப்பினர் ஆசிரியர் திரு பு. யுவதாஸ் அவர்களின் வரவேற்புரையுடன், மட்/மட் புதுக்குடியிருப்பு  கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற மாணவர்களின் வரவேற்பு நடனம் அரங்கை அலங்கரித்தது.

தொடர்ந்து ஷர்மிலா சுப்ரமணியம் அவர்களின் அரங்க அறிமுகம் இடம்பெற்று சிறப்பான நடன நிகழ்வினை கோபிநாத் அகன்யா அவர்கள் ஆற்றுகை செய்தார். அதனைத் தொடர்ந்து தேசிய மட்ட கதாப்பிரசங்கப் போட்டியில் வெற்றி பெற்ற  இன்பராசா புகழாரணி அவர்களின் கதா பிரசங்கமும், தனுஷ்கரன் மிர்த்திகா அவர்களின் கவிதையும், தனுராஜ் ஆதித்யஸ்ரீ அவர்களின் பேச்சும் கம்பன் விழாவைச் சிறப்பித்தது.

கம்பன் விழா ஒழுங்கமைப்புத் தலைவர் கதிரவன்  த. இன்பராசா அவர்களின் ஊர் இருந்து உலகம் வரை என்னும் தலைப்பிலான சிறப்புரையினைத் 
தொடர்ந்து ஏழு வயது சிறுமி சுப்பிரமணியம் காவியஸ்ரீ அவர்களுக்கு  மனிதக் கணிப்பான் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றதோடு அவரின் மன கணித சிறப்பு நிகழ்வும் இடம் பெற்றது.

அயோத்தி அரங்கின் விசேட நிகழ்வாக சட்டத்தரணி  அ. அன்பழகன் குரூஸ் தலைமையில் கம்பன் கவிச்சமர் இடம்பெற்றது. கவிச் சமரில் கவிமகள் ஜெயவதி மற்றும் கவிஞர் ரவி கிருஷ்ணா ஆகியோர் சமரிட்டனர். கம்பராமாயணத்தின் சில பாத்திரங்களை, பாத்திரங்களின் பண்புகளை, பாத்திரங்களுக்கு ஊடாக வெளிப்படுகின்ற சிந்தனைகளை சமகால மனித வாழ்வியலோடு இணைத்து வெளிப்படுத்தும் விதமாக கவிச்சமர் அமைந்தது.

தொடர்ந்து 150 அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான    பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, நிகழ்வில் பங்கு பற்றிய விருந்தினர்களுக்கான கம்பன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.

நிகழ்வின் பிரதான விடயமாக போபால் கம்பன் கழகத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு கதிரவன் கலைக் கழகத்தினால் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை. விசேட அம்சமாகும். அந்த வகையில் போபால் கம்பன் கழகத் தலைவர் பா.மா.சௌந்தர்ராஜன் அவர்களுக்கு "கம்பதாசன் " எனும் விருதும், செயலாளர் பா.குமார் அவர்களுக்கு பன்னாட்டுப்பாவலர் எனும் விருதும் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து விருந்தினர்களின் வாழ்த்துரைகளோடு,
நர்மதா அகளங்கன் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது. அயோத்தி அரங்கின்  நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் ஜீ.எழில்வண்ணன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.



அமர்வு இரண்டு இலங்கேஸ்வரன் அரங்காக பெயரிடப்பட்டு பிரம்மாண்டமான நிறைவு விழா பி.ப 3.00 மணிக்கு  அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத் தலைவர் இறைபணிச் செம்மல் த. கைலாயபிள்ளை ஆசியுரை வழங்க, வேல்முருகன் சகோதரர்கள் அண்ணாச்சி சண் சிவபாதசுந்தரம்  முன்னிலை வகிக்க, கதிரவன் ஆலோசகர் திரு அ. குலேந்திரராஜா தலைமையில் நிகழ்வுகள் ஆரம்பமானது. விருந்தினராக  மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு கி. குணநாயகம், மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு மூ.சிவானந்தராசா, புதிய நூற்றாண்டு அரிமா கழகத் தலைவர் அரிமா ரணசிங்க லலித்குமார்  ஆகியோர் பங்குபற்றினர்.

அத்துடன் சமூக - சமய மட்ட அமைப்புகளின் தலைவர்கள், அரச அதிகாரிகள், கலை இலக்கிய வாதிகள் எனப் பலரும் இவ்வரங்கில் பங்குபற்றினர் 

நிகழ்வுகளின் வரிசையில் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சிவ தட்சுதன் அவர்களின் இறைவணக்கம் இடம் பெற்று கதிரவன் கீதம் இசைக்கப்பட்டு  மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய கண்ணகி கலா மன்ற  மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.  

கதிரவன் கலைக் கழகப் பொருளாளர் திரு சி. சுதேஸ்வரன் அவர்களின் வரவேற்புரை மற்றும்
கவிஞர் தங்க யுவன் அவர்களின் இலங்கேஸ்வரன் அரங்க அறிமுகவுரையினை தொடர்ந்து, களுவாஞ்சிகுடி சைவ மகா சபையின் வில்லுப்பாட்டு அரங்கை அலங்கரித்தது. தொடர்ந்து ஸ்ரீ முருகன் நாட்டிய சேத்ரா மாணவிகளின் நடனம் இடம்பெற்று கம்பன் விழாவின் சிறப்புப் பட்டிமன்றம் பட்டிமன்ற நடுவர் கதிரவன் த. இன்பராசா தலைமையில் கம்பராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவா....?  நட்பா....? என்னும் தலைப்பில் கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 171 வது பட்டிமன்றமாக அரங்கேற்றம் கண்டது. 

உறவே.....! எனும் அணியில் மட்டுநகர் சிவ வரதகரன், பாலமீன்மடு இரா கலைவேந்தன் ஆகியோரும் நட்பே......! எனும் அணியில் கவிஞர் அழகுதனு,  சோலையூரான் ஆ தனுஷ்கரன் ஆகியோரும்  விவாதித்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவையோரை சிந்திக்கச் சிரிக்க வைக்க கூடிய வகையில் மிகச் சிறப்பாக அமைந்த பட்டிமன்றத்தில் கம்பராமாயண பாத்திரங்களின் ஊடாக வெளிப்படுகின்ற நட்பு உறவு சம்பந்தப்பட்ட விடயங்களை கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாண்டுள்ள விதம், சமகாலத்தில் மனித வாழ்வியலோடு இதனை எவ்வாறு இணைக்கலாம் என பல்வேறு விடயங்கள் பட்டிமன்றத்திற்கு ஊடாக பகிரப்பட்டது. 

பட்டிமன்றத்தினைத் தொடர்ந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கு முகமாக கம்பன் நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்குக் நிகழ்வு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் முக்கியத்துவம் பற்றி உணரத் தக்க வகையிலே இடம் பெற்றது.

அத்துடன்1976 ஆம் ஆண்டு  கதிரவன் கலைக் கழகம் ஆரம்பித்த காலத்தில் நாடகத் துறையில் செயற்பட்ட  ஆரம்பகால அங்கத்தவர்களுக்கான கௌரவம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

கலைஞர்கள் கௌரவத்தினை தொடர்ந்து போபால் கம்பன் கழகம் கதிரவன் கலைக் கழகத் தாபகர் கிராமிய கலைஞர் சி தங்கராசா, கதிரவன் கலைக் கழக ஆலோசகர் திரு அ. குலேந்திரராஜா மற்றும் வேல்முருகன் சகோதரர்கள் சண் சிவபாதசுந்தரம்  ஆகியோருக்கு  "கம்பன் பணிச்சுடர் " விருதினையும் கதிரவன் கலைக் கழகத் தலைவர் த.இன்பராசா, கதிரவன் கலைக் கழக ஆலோசகர் சட்டத்தரணி அ. அன்பழகன் குரூஸ் ஆகியோருக்கு "கம்பன் தமிழ்ச் சுடர்" விருதினையும் வழங்கி வைத்தனர்.
 
நிகழ்வில் நகைச்சுவைப் பூபாலன் நன்றியுரை வழங்க கதிரவன் கலைக்கழகச் செயலாளர் புதுவையூர் பு தியாகதாஸ் நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தார்.
கம்பன் விழா சிறப்பாக நடைபெற கதிரவன் கலைக் கழகத்தோடு போபால் கம்பன் கழகம் மற்றும் கதிரவன் உறவுகள், கலை இலக்கிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பேராளர்கள் கைகோர்த்தமை கம்பன் விழாவின் வெற்றிக்கு சான்றாகும் எனக் கருத முடிகிறது.