ஊர் இருந்து... உலகம்வரை...


1976 ஆம் ஆண்டு கலை பண்பாட்டு - இலக்கிய மற்றும் சமூக சேவை அமைப்பாக வித்தகர் கலாபூசணம் சின்னத்தம்பி. தங்கராசா (கரகாட்டக் கலைஞர் - கிராமியக்கலைஞர்) அவர்களால் மட்டக்களப்பு-மண்முனைப்பற்று - புதுக்குடியிருப்பில் தாபிக்கப் பெற்றதே கதிரவன் கலைக் கழகம்.

புதுக்குடியிருப்பு மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு விக்கினேஸ்வரர் மற்றும் கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் பொழுதுபோக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள் மத்தியில் கலைக் கழகம் ஒன்றை உருவாக்கி இம்முறை கண்ணகை அம்மன் கோயிலுக்கு நாடகம் அரங்கேற்ற வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றதின் நிமித்தம் அதற்கென 28.04.1976 கூட்டப்பெற்ற கூட்டத்தில் உதயமாகியதே கதிரவன் கலைக் கழகம்.

இக் கலைக் கழகம் தொடக்க காலத்தில் சமூக நாடகம்,புராண நாடகம், நாட்டுக்கூத்து, கரகம், கும்மி, வசந்தன் மற்றும் காவடியாட்டம் முதலிய கலை நிகழ்வுகளை பல கிராமங்களில் குறிப்பாக ஆலயச் சடங்குகள், திருவிழாக்களின் போது அரங்கேற்றம் செய்து பாராட்டுக்களையும்

பரிசில்களையும் பெற்றுள்ளது.

முதலாவதாக "போடியார் வீட்டு கலியாணம்", "சதிகாரன் தம்பியால் அலைந்த உறவு" எனும்  சமூக நாடகம் இரண்டினை மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் உழவு இயந்திரத்தின் பெட்டியில் அமைந்த அரங்கிலே அரங்கேற்றியுள்ளனர்.

முதலாவது இவ் அரங்கிற்கு பின் அயற் கிராமங்களிலும் குறிப்பாக ஆலய சடங்குகள் திருவிழாக்களின் போது சமூக நாடகங்கள் பல கதிரவனால் அரங்கேற்றப்பட்டன . தாபகர் தங்கராசாவுடன்,  சுந்தரலிங்கம், கதிரேசு, மகேஸ்வரன், சிவனேசன்,  ரவீந்திரன், கனகரெட்டு, கணபதிப்பிள்ளை, புவனசிங்கம், தியாகராசா மற்றும் அமரர்களான வினாயகமூர்த்தி, குணசேகரன், சுக்குரு,கணபதிப்பிள்ளை முதலான நூற்றுக்கு மேற்பட்ட கலைஞர்கள் ஆரம்பகாலத்தில் வருடா வருடம் இடைவிடாது கலைச் செயற்பாட்டினை முன்னெடுத்து வந்துள்ளனர்.

கதிரவன் கலைக்கழகம் 2000 ஆம் ஆண்டு வட கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் (வகிமா/கஅ/பண்/மட்/21/2000) எனும் இலக்கத்தில் பதியப் பெற்று மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வரத்தொடங்கியமை பிரதேசம் எங்கும் அதன் செயற்பாடு பரவ ஆரம்பித்தது எனலாம்.

1976 தொடக்கம் 2000 வரை கலாபூசணம் சி.தங்கராசாவின் முழுமையான வழிப்படுத்தல், நெறியாள்கையில் "உண்மையே உயர்த்தும் ஏணி", "மதுரவாசகன்", "விதிசெய்த சதி, "பிரம்படிபட்ட பெருமாள்","பாஞ்சாலி சபதம்", "இராவணன் முதலான 25 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களையும், "சராசந்தன் சமர்", "உருத்திரசேனன் சண்டை"," அல்லி திருமணம்", "வள்ளிதிருமணம்", "ஆரவல்லி", "பகாசூரன் சண்டை", "இராவணன்", "லவகுயன்" முதலான 20 இற்கும் மேற்பட்ட கரகாட்டத்தையும், காவடி , கும்மி ,செம்பாட்டம் முதலான 40 இற்கும் மேற்பட்ட நிகழ்வுகளையும் ஆலய சடங்குகள் திருவிழாக்களின் போதும்,  பிரதேச மாவட்ட கலை விழாக்களின் போதும்  ஆற்றுகை செய்து கலை பண்பாட்டுச் செயலில் கதிரவன் தனக்கென்றொரு இடத்தை தக்கவைத்தது என்பதில் ஐயமில்லை.

2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 வரை தங்கராசா கோபாலகிருஸ்ணன் தலைமையில் கதிரவன் கலைக் கழகம் இசைநாடகம். தாளலயம். விவாதம், நவீன நாட்டுக்கூத்து,வில்லுப்பாட்டு முதலான கலை நிகழ்வுகளை அரங்கேற்றம் செய்யத் தொடங்கியது அக்காலத்திலும் தங்கராசாவின் நீண்ட நேரம் (விடிய விடிய ஆடும் கரகம்) அரங்கேற்றம் கண்டமை குறிப்பிடத்தக்கதாகும். புதுக்குடியிருப்பு தாழங்குடா கிரான்குளம், ஆரையம்பதி, பங்குடாவெளி, கல்லடி, முனைக்காடு, மகிழடித்தீவு முதலான  30 இற்கும் மேற்பட்ட கிராமக் கோயில்களில் மேற்படி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

2005 இற்குப்பின் கதிரவன் கலைக் கழகத்தின் செயற்பாடு விரிவுபடுத்தப்பட்டது.கதிரவன் த.இன்பராசா தலைமையில் "விழிப்புணர்பு வீதிநாடகம்" எனும் திட்டம் ஆரம்பமானது. இக்காலத்திலே அயற்கிராமக் கலைஞர்கள் குறிப்பாக கிரான்குளம் கவிஞர் ஜீ.எழில்வண்ணன் குழுவினர் தாழங்குடா ந .பிறேமக்குமார் முதலானோர் இணைந்து கொண்டனர்.

புதுக்குடியிருப்பிலிருந்து த.பூபாலசிங்கம், சி.சுதேஸ்வரன், பா.ருதிகுமார், பு.தியாகதாஸ், சி.சுந்தரசுதர்சன், க.டட்சன் த.யுவராசா (தங்க யுவன்) த.கோபாலகிருஸ்ணன், த.புவனேந்திரன், ச.ஜெகரூபன்,பா.ஜெயக்குமார், அமரர் ந.தேவேந் திரன், பே.பிரகாஷ், அ.பிரபாகரன்,  க.மோகன்ராஜ், உ.உதயபிரசாந் முதலான கலைஞர்களும், கிரான் குளத்திலிருந்து ஜீ.எழில்வண்ணன் மற்றும் அவர் அழைத்து வந்த தவரூபன், சிவஜினோத், ஆ.பிரதீபன், சுபாஸ்கரன் முதலான கலைஞர்களும் தாழங்குடாவிலிருந்து ந.பிறேமக்குமார், ந.சரோஜினி, சிறி இந்துஜா, சிறி-வினுஜா, றுபேசன்,  பிரசாந் முதலான கலைஞர்களும் ஆரம்பகால வீதிநாடகங் களிலும் அரசடித்தீவு புலக்சன், வேனுரூபன், மகிழடித்தீவு தசதரன், அம்பிளாந்துறை அழகுதனு, பாலமீன்மடு கலைவேந்தன், கொக்கட்டிச்சோலை கலை வேந்தன் முதலைக்குடா கஸ்தூரி முதலான பல கிராமங்களில் இருந்தும் வீதிநாடக கலைஞர்கள் இணைந்து கொண்டனர்.

"2015 தொடக்கம் கிழக்கு மாகாணத்தில் 100 இற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு தலைப்புக்களில் 200 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் 2000 இற்கும் மேற்பட்ட வீதிநாடக ஆற்றுகைகளை கதிரவன் கலைக் கழகம் நிகழ்த்தியுள்ளது" இந்நாடகங்கள் கிழக்கு மாகணத்திலுள்ள மாவட்டசெயலகங்கள், பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகள் முதலான அரச திணைக்களங்களின் அனுசரணையுடனும், "நெக்டெப்", "வேல்ட் விஷன்", "ஒக்ஸ்பாம்", "கமிட்", "கென்டிகெப்", "யுனிசெப்", "PIN", "அக்டட்", "IUCN", "GIZ", முதலான கிட்டத்தட்ட 35 இற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் அனுசரணையுடனும் ஆற்றுகை செய்யப்பட்டமை அவதானிக்கத்தக்கன.

2007 ஆம் ஆண்டு "கதிரவன் பாலர் பாடசாலை",மற்றும்  "கதிரவன் கல்வி நிலையம்" தோற்றம் பெறுகின்றன. இவ்விரண்டு கல்வி நிறுவனங்களும் புதுக்குடியிருப்பு கிராமத்தில் மாத்திரமின்றி அயற்கிராமங்களிலும்  கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றமை குறிப் பிடத்தக்க விடயமாகின்றது.

2008 இல் கதிரவன் த.இன்பராசா அவர்கள் பிரதம ஆசிரியராகக் கொண்டு "கதிரவன்" கல்வி, இலக்கிய கலைச் சஞ்சிகை உதயமாகிறது. சஞ்சிகை வரவும், மேற் கூறப்பட்ட வீதி நாடகச் செயற்பாடும் கதிரவன் அமைப்பினையும், கதிரவன் கலைஞர்களையும் பல இடங்களில் அறியவைத்திருந்தன. 

இக்காலகட்டத்தில் சபா மதன், சௌந் லெனாட் லொறன்ஸோ, ந.பிறேமக்குமார், ஜீ.எழில்வண்ணன் த.கோபாலகிருஷ்ணன், த.யுவராசா, சி.சுதேஸ்வரன், பு.தியாகதாஸ், த.தயாபரம், சி.புவனேந்திரன் குறிப்பாக "புதுக்குடியிருப்பு இளைஞர்கள்" முதலானோரின் ஒத்துழைப்பு, அர்ப்பணிப்பு என்பன சிறப்பிடம் பெற்றிருந்தன.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய நாடகப் போட்டியில் அருகே ஒரு பாலைவனம்” தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மையும் 2008 காலப்பகுதியாகும் பிரதேச, மாவட்ட மட்ட கலை இலக்கிய போட்டிகளில் பங்கேற்றதோடு பெருமளவான வெற்றிகளைப் பெற்ற கதிரவன் கலைக்கழகம் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு நூல் வெளியீடுகள், கலைஞர் கௌரவங்கள், முதலான செயற்பாடுகளை

முன்னெடுக்க ஆரம்பித்தது. குறிப்பாக கதிரவனின் "தாழையூர் முத்துமாரியம்மன் லோரன்ஸோவின் "சருகவேட்டி" நிலாதமிழின் தாசனின் "ஆதித்தனும் அடர்ந்த காட்டுச் சாமியாரும்". இரா.கலைவேந்தனின் "நிறம்" அழகு தனுவின் "மழழை மொழிகள்"

கதிரவன் த.இன்பராசாவின் "அப்பாவின் ஆரிராரோ" (தாலாட்டுப் பாடல்கள்)  முதலான நூல்களை வெளியிட்டும். கவிஞர் நிலா தமிழின் தாசன் கலாபூசணம் ஆ.மு.சி.வேலழகன், கவிஞர் ச.பா.மதன், கவிஞர் அம்பிளாந்துறை அரியம், திருக்கோயில் யோகா யோகேந்திரன். கலாபூசணம் வாகரைவாணன், சுந்தரமதி வேதநாயம், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், கவிஞர் அழகுதனு முதலான படைப்பாளிகளின் நூல்களுக்கு வெளியீட்டு விழாக்கள் நடத்தியும், "கதிரவன் விருது" இயக்குநர் இமயம் பத்மசிறி பாரதிராஜா பங்குபற்றிய வழங்கிய "கலைஞர் கெளரவம்", பரிசளிப்பு, பாராட்டு விழாக்கள், பொங்கல் விழா முதலான நிகழ்வுகளை நடத்தியும் , குறும்படங்கள் மற்றும் பக்திபாடல் இறுவட்டுகள் வெளியிட்டும் கதிரவன் தன் செயற்பாடுகளை அகலப்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

2010 ஆண்டு "கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம்" தோற்றம் பெற்றமையும் அதன் மூலமாக பல்வேறுபட்ட சமூகப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும்  விசேட அம்சமாகும்.

அரசசார்பற்ற திணைக்களங்களின் நிகழ்வுகள், சர்வதேச தினங்கள், ஆலய சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் என பல்வேறு விழாக்களில் கதிரவனின் பிரசன்னம் காணப்படும் அளவிற்கு வேகமாக வளர்ச்சியை நோக்கியிருந்த கதிரவன் 18.01.2015 ஆம் ஆண்டு "கதிரவன் பட்டிமன்றப் பேரவை" யினை ஆரம்பித்து கிழக்கிலங்கையில் பட்டிமன்றத்திற்கு பேர்போன அமைப்பாக திகழ்கின்றது.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா புதுக்குடியிருப்பில் இடம்பெற்றபோது கதிரவன் த. இன்பராசா மற்றும் சபா. மதன் ஆகியோரால் ஒழுங்கபடுத்தப்பட்ட பட்டிமன்றத்தில் அன்பழகன் குரூஸ்,  ஜீ.எழில்வண்ணன், செ.துஜியந்தன்,  ச.நிலோஜினி, படையூர் ஜெமஸ், சௌந்.லெனாட் லொரன்ஸோ, மேரி கொரற்றி ஆகியோர்  அரங்கேறியதில் இருந்து பாலமீன்மடு இரா. கலைவேந்தன், அம்பிளாந்துறை அழகு தனு, கொக்கட்டிச்சோலை ஆ. தனுஸ்கரன், மட்டுநகர் சிவ வரதகரன், மகிழடித்தீவு ந. தர்சினி, களுதாவளை க.நர்மதா, வாழைச்சேனை  த.அமர்நாத்,  புதுக்குடியிருப்பு பு.தியாகதாஸ்,  தங்கயுவன்  மற்றும்     த.கோபாலகிருஸ்ணன்

சி.சுதேஸ்வரன்,  த.பூபாலசிங்கம் முதலான பட்டிமன்றப் பேச்சாளர்களுடன் 125 ஆவது பட்டிமன்றம் மற்றும் கவியரங்கங்களை நோக்கி கதிரவன் செல்கின்றது.

"Katர்iravan Tamil" யூடியூப் மற்றும் முகநூல் பக்கம் ஊடாக சமூக விழிப்புணர்வு காணொளிகளை பதிவேற்றி சர்வதேச ரீதியாக பிரசித்தி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இக்காணொளிகளில் பிரதான பாத்திரமேற்று கதிரவன் த.இன்பராசா,  சோலையூரான் ஆ. தனுஸ்கரன்,  தம்பிராசா பூபாலசிங்கம்,தங்கயுவன் நடிக்க " வீடியோ மற்றும் எடிட்டிங் " தங்க யுவன் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

த.யுவராஜ், சதா.சுதன் , ம.பிரியங்கன், ந.ரோஜிவன், தே.பிரவீன்,  ஜோ.ஜிதுசன், அழகு தனு,  இரா கலைவேந்தன்,  அன்பழகன்  குரூஸ், ச.சனந்தராஸ், சதா.மதன், த.கோபாலகிருஸ்ணன், சறோஜினி இன்பராசா, துர்சாந்தினி தனுஷ்கரன், யுவதர்சினி யுவராஜா, செ.தவேந்திரன், க.மோகன்ராஜ்,  சி.சுந்தரசுதர்சன், ஜெ.ருபேசன்,  கோ.சத்தியசீலன், க.சூரியகுமாரி, ம.டிலிபன், இ.புகழாராணி, தி.பவிஷ்ணவி, இ.கிருத்தி வாசன்,  த.மிர்த்திகா,   வெள்ளத்தம்பி, சு.மாதங்கி, துசிகரன், பா.டிபாகர், சி.வரதகரன்,  சி.சுதேஸ்வரன், அ.குலேந்திரராசா, கி.பிரவீன்,  ஈ.சனோஜன், கி.ரகு, ல.கிருஷாந், சர்மிதா,  சு.சுஜா, சு.சுஜி,  தி. கேஷ்ணவி, பிருத்தி,  லக்ஷிதா,  அபி  முதலானோரின் பங்களிப்பு Katர்iravan Tamil உயர துணைபுரிந்தன.  இந்தப் பின்புலத்தில் 14 ஆவது கதிர் உங்கள் கைகளில்.

- கதிரவன் -